Tuesday 13 December 2011

பழநி முருகனின் கோவண ரகசியம்!

Image

ஆறுபடைவீடுகளில் ஒன்றான பழநியில் அருளும் முருகனுக்கு ஞானப் பழம் என்ற பெயருண்டு. இங்கு முருகப்பெருமான், மாலையில் ராஜ அலங்காரத்தில் காட்சி தருவார். இது போலியான உலக வாழ்வைக் குறிக்கிறது. இவரே காலை வேளையில் கோவணத்துடன் காட்சியளிப்பார். நேற்று இருப்பது இன்றில்லை என்பதை இந்த வடிவம் காட்டுகிறது. இந்த உலக வாழ்வு போலியானது. உன்னோடு நான் உடுத்தியிருக்கும் கோவணம் கூட வரப்போவதில்லை. ஏதுமில்லாமல் வந்தாய், ஏதுமில்லாமல் போவாய், என்று முருகப்பெருமான் இத்தலத்தில் உணர்த்துகிறார். இந்த ஞானத்தை உலக மக்களுக்கு வழங்கும் கனி போன்று திகழ்வதால் இங்கு முருகனுக்கு ஞானப்பழம் என்ற பெயர் ஏற்பட்டது. இதனால்தான், இங்கு வந்த அவ்வையாரும் முருகனை பழம் நீ! என்று அழைத்தாள்.

Saturday 19 November 2011

கந்த சஷ்டி

கந்த சஷ்டி நோன்புபற்றி ஒரு புராண வரலாறுண்டு. பிரம்மாவிற்கு தக்கன், காசிபன் என்னும் இரு புதல்வர்கள் இருந்தனர். இவர்களுள் தக்கன் சிவனை நோக்கி கடுந்தவம் புரிந்து பல வரங்களைப் பெற்றிருந்த போதிலும் இறுதியில் சிவனால் தோற்றுவிக்கப்பெற்ற வீரபத்திரக் கடவுளால் கொல்லப்பட்டார். காசிபனும் கடுந்தவம் புரிந்து சிவனிடமிருந்து மேலான சக்தியினைப் பெற்றான். ஒருநாள் அசுரர்களின் குருவாகிய சுக்கிரனால் (நவக்கிரகங்களுள் வெள்ளியாக கணிக்கப்படுபவர்) ஏவப்பட்ட மாயை என்னும் பெண்ணின் அழகில் மயங்கி தான் பெற்ற தவ வலிமை எல்லாவற்றையும் இழந்தான். இதனைத் தொடர்ந்து காசிபனும் மாயை என்னும் அசுரப் பெண்ணும் முதலாம் சாமத்தில் மனித உருவத்தில் இணைந்து மனிதத் தலையுடன் கூடிய சூரனும், இரண்டாம், சாமத்தில் சிங்க உருவில் இருவரும் இணைந்து சிங்க முகத்துடன் கூடிய சிங்கனும், மூன்றாம் சாமத்தில் யானை உருவில் இணைந்து யானை முகத்துடன் கூடிய தாரகனும் நான்காம் சாமத்தில் ஆட்டின் உருவத்தில் இணைந்து ஆட்டுத் தலையுடன் கூடிய அசமுகி என்னும் அசுரப் பெண்ணும் பிறந்தனர்.

மாயை காரணமாக தோன்றிய அந்நால்வரும் ஆணவ மிகுதியால் அகங்கார மமகாரம் (செருக்கு)கொண்டு காணப்பட்டனர். இந்நால்வரும் சிவனை நோக்கி கடுந்தவம் புரிந்தனர். இவர்களின் கடுந்தவத்திற்கு இரங்கிய பரம்பொருள் இவர்கள் முன்தோன்றி வேண்டும் வரங்களை அருள்வதாகக் கூறி என் சக்தி அன்றி வேறு ஒரு சக்தியினால் உங்களை அழிக்க முடியாது என அருளினார். இவ்வரத்தினைப் பெற்ற சூரன் முதலானோர் தம்மைப் போல் பலரை உருவாக்கி அண்டசராசரங்கள் எல்லாவற்றையும் ஆண்டு இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களையும் சிறையிலிட்டு சொல்லொணாத் துன்பங்களைக் கொடுத்து அதர்ம வழியில் ஆட்சி செய்தனர்.

அசுரர்களின் இக்கொடுமையைத் தாங்க முடியாத தேவர்கள் கைலாயம் சென்று சிவனிடம் முறையிட்டனர். சூரன் முதலான அசுரர்களை அழிப்பதற்காக சிவன் தனது நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் மூலம் ஆறு குழந்தைகளை உருவாக்கினார். அக்குழந்தைகள் சரவணப் பொய்கையில் ஆறு கார்த்திகைப் பண்களால் வளர்க்கப்பட்டு உரிய காலம் வந்ததும் ஆறு குழந்தைகளும் பார்வதி தேவியினால் ஒன்று சேர்க்கப்பட்டு ஆறுமுக சுவாமி எனப் பெயர் பெற்றார். இந்த ஆறுமுகக் கடவுள் சூரனை வதம் செய்யும் போது மாயையினால் மாமரமாக நின்றான். அவனைத் தனது ஞான வேலால் பிளந்து அவனது ஆணவத்தினை அடக்கி சேவலும், மயிலுமாக மாற்றி சேவலை தன் கொடியாகவும் மயிலைத் தன் வாகனமாகவும் கொண்டு சூரனுக்கு சாரூப முத்தியை அருளி ஆட்கொண்டார். இவ்வாறே சிங்க முகன் தாருகன் என்போரின் அகங்கார மமகாரம் அழிக்கப்பட்டு இவர்கள் முறையே அம்பிகையினதும், ஐயனாரினதும் வாகனங்களாகி ஆட்கொள்ளப்பட்டனர். இவ்விரதத்தினை வாழ்க்கையில் எந்நிலையில் உள்ளவர்களும் தமக்கு வேண்டிய வரத்தினைப் பெற அனுஷ்டித்து அவற்றினை பெற்றுக் கொள்ளலாம் என்பது திண்ணம். ""மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்தருளும் ஏரகச் செல்வ'' எனும் வரிகளும் ""எந்த நாளும் ஈரேட்டாய் வாழ்வார்'' எனும் வரி மூலமும் மனித வாழ்க்கைக்குத் தேவையான பதினாறு பேறுகளையும் தரவல்லது என்பதையும் அறியமுடிகின்றது. மேலும் கந்த சஷ்டி கவசம் என்னும் பாடலைப் பாடிய தேவராசன் சுவாமிகள் பல ஆண்டுகளாக மாறாத கொடிய வயிற்று வலியால் பீடிக்கப்பட்டு இருந்த போதிலும் இவ்விரதத்தினை அனுஷ்டித்து முருகன் அருளால் குணமடைந்தார்.

Thursday 13 October 2011


31-10-2011- சூரசம்ஹாரம் கந்தசஷ்டி
            தீபாவளி பண்டிகைக்குப்பின் ஆறு நாட்கள் கந்தசஷ்டி விரதம் இருப்பார்கள்.

இந்த சஷ்டி விழா பல தலங்களில் நடத்தப்பட்டாலும் சிறப்பாகவும் கோலாகலமாகவும் கொண்டாடும் தலம் திருச்செந்தூர்தான். ஏனெனில் இங்குதான் செந்தில்நாதன் சூரனை சம்ஹரித்தார்.

சூரபத்மன் முற்பிறவியில் தட்ச னாக இருந்தான். பின் மாயைக்கும் காஸ்யப முனிவருக்கும் சூரபத்மனா கப் பிறந்து, தன் பேரன் குமரனால் வதம் செய்யப்பட்டு- வாழ்வளிக்கப் பட்டு, பேரனுடனேயே மயிலாகவும் சேவலாகவும் எப்போதும் இருக்கும் பேறு பெற்றான்.


மயில் வாகனம்

முருகனுக்கு மூன்று மயில்கள் உண்டு. மாங்கனி வேண்டி உலகைச் சுற்றி வர உதவிய மயில் மந்திர மயில். சூரசம்ஹாரத்தின்போது இந்திரன் மயிலாகி முருகனைத் தாங்கினான். இது தேவ மயில். பின் சூரனை இருகூறாக்கியதில் வந்த மயில்தான் அசுர மயில்.


சிக்கல்

"சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சூரசம்ஹாரம்' என்பர். சிக்கல் தலத்தில்தான் முருகப் பெருமான் தன் தாயிடம் வேலைப் பெற்றார். சஷ்டியின் ஐந்தாம் நாள் விழாவன்று, வேல் வாங்கும் உற்சவ முருகனுக்கு முகமெங்கும் வியர்வைத் துளிகள் அரும் பும் அதிசயத்தை ஆண்டுதோறும் காணலாம்.

கிருத்திகை என்றால் திருத்தணி. (இங்கு மட்டும் சூரசம்ஹார விழா நடைபெறாது). தைப்பூசம் என்றால் பழனி. கந்தசஷ்டி என்றால் திருச்செந்தூர்.

சுக்ராச்சாரியார் அசுர குரு. அசுரர் குலம் தழைக்க அவர் விருப்பப்படி, அசுரமங்கை மாயை காஸ்யப முனிவரை மயக்கினாள். இருவருக்கும் பிறந்தவர்கள் சூரபத்மன், சிங்க முகன், தாரகாசுரன் எனும் மூன்று மகன்கள். மகள் அஜமுகி. பின் மாயை முனிவரை விட்டு விலகிவிட்டாள்.

இந்த மூன்று அசுரர்களும் சிவனை நோக்கி கடுந்தவம் புரிந்து பற்பல வரங்கள் பெற்றனர். பின் இவர்கள் சாமர்த்தியமாக ஒரு வரம் பெற்றனர். அதாவது சிவனின் சக்தியால் மட்டுமே அழிவு வரவேண்டும்; கர்ப்பத்தில்  பிறக்காத ஒரு ஆண் மகனால் மட்டுமே               இறக்க வேண்டும் என்பதுதான் அது. பின் அனைவருக்கும் பல துன்பங்களைத் தந்தனர். தேவர்களை அடிமைப்படுத்தினர்.

இதனால் தேவர்கள் சிவனிடம் முறையிட்ட னர். "என் ஆற்றலால் உருவாகும் மகனால் நன்மை பெறுவீர்கள்' எனக் கூறிய சிவன் தவத்தில் ஆழ்ந்தார்.

சிவனின் தவத்தைக் கலைக்க தேவர்கள் மன்மதனின் உதவியை நாடினர். அவன் எய்த அம்பால் சிவன் நெற்றிக்கண் திறக்க, மன்மதன் தகனமானான். பின் சிவன் தன் ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜா தம், அதோமுகம் என்ற ஆறு முகங்களின் நெற்றிக்கண்களில் இருந்து ஆறு பொறிகளைத் தோற்றுவித்தார். (இப்படி காமதகனமும் ஆறு பொறிகளும் தோன்றிய தலம்தான் கொருக்கை. அதனால் இத்தலம் முருகன் பிறந்த தலம் என்கின்றனர். இது சீர்காழி- திருப்பனந்தாள் வழியில் மலைமேடு அருகேயுள்ளது.)

இந்த ஆறு பொறிகளும் சரவணப் பொய்கையில் விழுந்து ஆறு குழந்தைகள் ஆயின. கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப் பட்ட இவர்களை பார்வதி பாசத்துடன் சேர்த்தணைக்க, ஓராரு முகமும் ஈராறு கரமும்  கொண்டு ஆறுமுகன் தோன்றினான். இவன் வளர்ந்து குமரன் ஆனதும் (கர்ப்பவாசமின்றி பிறந்தவன்) சிவன் முருகனது அவதார நோக்கத்தைக் கூறி சூரனை வதம் செய்யச் சொன்னார்.

சிவன் தன் ஆற்றல்களைத் திரட்டி ஒரு வேலாக்கி, அந்த சிவசக்தி வேலை முருகனுக்குக் கொடுத்து, வீரபாகு தலைமை யில் படைகளை உருவாக்கி அவர்களையும் முருகனுடன் அனுப்பினார். சக்தியும் தன் சக்தியத்தனையையும் திரட்டி ஒன்றாக்கி சக்தி வேலாயுதம் செய்து முருகனிடம் கொடுத்தாள். (அதைத்தான் சிக்கலில் வாங்குகிறார்.) 

இப்படி போரிடச் சென்ற முருகன், முதலில் சிங்கமுகன், தாரகாசுரன், அவன் மகன் என எல்லா சேனைகளையும் ஐந்து நாட்களில் அழித்தார். ஆறாம் நாள் எஞ்சியவன் சூரபத்மன்தான்.

குமரன் சூரனை வதம் செய்யப் போரிடும்போது சூரபத்மன், "இந்த சிறுவனையா கொல்வது? வேண்டாம். எனினும் போரில் நான் வெல்ல வேண்டும்' என எண்ணிப் போரிட்டான். இதை அறிந்த கந்தன் தன் விஸ்வரூபத்தை ஒரு நொடி காட்டினான். அப்போது சூரன் இந்த சிறுவன் தன் பேரன் என்பதை உணர்ந்தான். ஒரு நொடிப் பொழுதுதான்; பின் மறந்தான். அந்த ஒரு நொடியிலேயே முருகனிடம் "உன்னைத் தாங்கும்பேறு தருவாயா?' என கேட்டும் விட்டான்.

எனவே தாத்தாவைக் கொல்ல மனமின்றி முருகன் போர் செய்து கொண்டி ருந்தபோது, சூரபத்மன் மாமரமாகி கடலில் தலைகீழாய் நின்றான். குமரன் தன் கூர்வேலால் மாமரத்தை இருகூறாக்கி, ஒன்றை தன்னைத் தாங்கும் வாகனமான மயிலாகவும்; ஒன்றை சேவலாக்கி தன் கொடியிலும் வைத்துக்கொண்டு சூரனுக்குப் பெருவாழ்வு கொடுத்தான். சூரசம்ஹாரம் முடிந்தது. சூரன் மாமரமான இடம் மாம்பாடு எனப்படுகிறது. இன்றும் இங்கு மாமரம் தழைப்பதில்லை. 

ஆறுமுகமும் 12 கரங்களும் கொண்ட முருகனின் திருக்கோலத்தை சஷ்டி விழாவின்போது மட்டுமே முழுதாகத் தரிசிக்கலாம். மற்ற நாட்களில் அங்கவஸ்திரத்தால் மூடி விடுவார்கள்.

சூரசம்ஹாரம் முடிந்தபின் முருகன் சிவபூஜை செய்ய விரும்பி னான். அதற்காகக் கடற்கரையில் கட்டப்பட்ட கோவில்தான் திருச் செந்தூர் கோவில். இங்கு மூல ஸ்தானத்தின் பின்பகுதியில் முருகன் பூஜை செய்த சிவலிங்கத் தைக் காணலாம்.
சூரசம்ஹாரத்தோடு விழா முடிவதில்லை. தேவர்களுக்கு முருகன் செய்த உதவிக்கு கைம் மாறாக, இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்து வைத்தான். எனவே மறுநாள் முருகன்- தெய்வானை திருமண வைபவத்தோடுதான் விழா நிறைவு பெறுகிறது.


திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா

            ந்த ஆறு நாட்களும் வேள்விக் கூடத்தில் காலையும்  மாலையும் வேள்வி நடத்துவார்கள். பின் செந்தில்நாதன், வள்ளி, தெய்வானை உற்சவர்களை தங்க சப்பரத்தில் இருத்தி வீதியுலா வரச் செய்து சண்முக விலாச மேடையில் தீபாராதனை செய்வர்.


ஒவ்வொரு நாள் இரவும் சஷ்டி மண்டபத்தில் அபிஷேக ஆராதனைகள் செய்து, தங்கத் தேரில் வலம் வரச் செய்வார்கள். அப்போது அடியார்கள் வேல் வகுப்பு, திருப்புகழ், வீரவாள் வகுப்பு பாடியபடி செல்வார்கள்.

ஆறாம் நாள் மாலை கடற் கரையில் சூரசம்ஹாரம் நடக்கும். அப்போது கடலும் உள்வாங்கி இடம் தரும். இந்நிகழ்ச்சியைக் காண பக்தர் கூட்டம் அலை மோதும். பார்க்கும்போது            தலையா கடல் அலையா எனத் தோன்றும். 


முருகனின் ஒரு திருநாமம் கோடி நாமங்களுக்குச் சமம் என்பர்.


ணவம், அகங்காரம் அதிகமானால் அதனை அழித்திட ஆண்டவன் அவதாரம் செய்கிறான்.

இரண்ய கசிபுவின் ஆணவத்தை மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து அழித்தார்.

அகங்காரம், காமவெறி கொண்ட இராவ ணேஸ்வரனை மகாவிஷ்ணு மனித அவதார மாக- ராமனாக உருக்கொண்டு அழித்தார்.

சூரபத்மாதியர்களை பரமசிவனே மறுவுருவமாக- சுப்ரமண்யனாக உதித்து அழித்தார். 


மற்ற அசுரர்கள் அழிவை வதம் என்கிறோம்; சூரபத்ம அழிவை சம் ஹாரம் என்கிறோம். என்ன வேறுபாடு? மாமரமான சூரனை முருகன் வேலால் துளைக்க, அதன் ஒரு பாதி மயிலாகி முருகனுக்கு வாகனமாகியது. மறுபாதி சேவலாகி, அதனைக் கந்தன் கொடியாக ஏந்தினான். அவர்கள் ஒப்பந்தமும் 

அவ்வாறே. இருவரும் மற்றவரை ஏந்த வேண்டும். இந்த மாதிரியான வினோதம் முருகப் பெருமானுக்கு மட்டுமே.



கஜமுகாசுரனை வென்ற கணபதிக்கு அசுரன் எலியாகி வாகனமானான்; ஆனால் 
அவனை கணபதி ஏந்தவில்லை.

சுப்ரமண்யன் உதித்தது வைகாசி விசாகப் பௌர்ணமி அன்று. விசாக நட்சத்திரத்தில் தோன்றிய மற்ற இருவர்- கணபதியும் ராதாதேவியும். ராதை- கண்ணன் மணமும் 

அந்த நாளில்தான் நடந்தது. 


சூரசம்ஹாரம் நடந்தது திருச்செந்தூர் என்பதால், கந்தனின் அவதார தின வைகாசி விசாகப் பெருவிழாவும் திருச்செந்தூரில் சிறப்பாக நடக்கிறது. மற்ற எல்லா இந்துக் கோவில்களிலும் இவ்விழா விமரிசையாகவே கொண்டாடப்படுகின்றன.

வியாசர் எழுதிய 18 புராணங் களில் ஸ்காந்தம் என்னும் கந்தபுராணமே மிகப்பெரியது. ஒரு லட்சம் சுலோகங்கள் கொண்டது. மற்ற எல்லா புராணங்களும் சேர்ந்தே மூன்று லட்சம் சுலோகங்கள்தான்.
கந்தன் பல பெயர்களால் போற்றப்படுகிறான்.

விசாக நட்சத்திரத்தில் தோன்றியதால் விசாகன்.

அக்னி ஏந்தியதால் அக்னி பூ.

கங்கை ஏந்தியதால் காங்கேயன்.

சரவணப் பொய்கையில் குழந்தையானதால் சரவண   பவன்.

கார்த்திகைப் பெண்களால் பாலூட்டப்பட்டதால் கார்த்திகேயன்.

ஆறுமுகம் கொண்டதால் ஆறுமுகன், ஷண்முகன்.

ஆறு குழந்தைகள் ஒன்றியதால் ஸ்கந்தன், கந்தன்.

தமிழில் முருகு என்றால் அழகு; அழகானவன்- 

அதனால் முருகன். 

விசாகம், கார்த்திகை ஆகிய இரண்டு நட்சத்திரங்களைக் கொண்டவன் முருகன். இதுவும் ஒரு சிறப்பு.

கந்தனின் அவதார சமயம்... சிவ- பார்வதியுடன் கங்கையும் அக்னியும் அங்கிருந்தனர். அவன் யார்மீது அதிக அன்பு வைத்திருக்கிறான் என்பதை அறிய விரும்பி, ஒரே சமயத்தில் நான்கு பேரும் குழந்தையை அழைத்தனர். அவன்தான் சிவஞான பண்டிதனாயிற்றே! பாரதம் இவ்வாறு கூறுகிறது:

சிவன் தந்தை; அக்னி வளர்ப்புத் தந்தை.

பார்வதி தாய்; கங்கை வளர்ப்புத் தாய்.

அவன் ஸ்கந்தன், விசாகன், சாகன், நைகமேயன் என நான்கு உருவம் கொண்டான்.

சிவனிடம் ஸ்கந்தனும், பார்வதி யிடம் விசாகனும், அக்னியிடம் சாகனும், கங்கையிடம் நைகமேய னுமாகத் தாவிச்சென்று அனைவரையும் மகிழ்வித்தானாம்.


முருகு என்றால் தமிழில் அழகு. இதில் மற்றொரு தத்துவ மும் உண்டு. அத்ரிக்கும் அனுசூயா தேவிக்கும் வினோதமாக உதித்த குழந்தை தத்தாத்ரேயர். பிரம்மா, விஷ்ணு, சிவ ஐக்கியமான உடல்; மூன்று தலை; ஆறு கைகள். இதற்கும் முருகனுக்கும் என்ன சம்பந்தம்?

மு என்றால் முகுந்தன்- அதாவது விஷ்ணு.

ரு என்றால் ருத்ரன்- அதாவது சிவன்.

கு என்றால் கமலத்தில் உதித்தவன்- அதாவது பிரம்மன்.

அதிகமாக மகாராஷ்டிரத்தில் தத்தாத் ரேயரை பரமகுருநாதராக வணங்குவர். மகா விஷ்ணுவை ஹயக்ரீவ அவதாரத்தில் ஞானகுருவாக வைணவர்கள் வணங்குவர். கிருஷ்ண அவதாரத்தில் அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்து "கிருஷ்ணம் வந்தே ஜகத்குரு' என போற்றப்படுகிறார்.

பரமசிவன் தட்சிணாமூர்த்தியாக- ஞானமௌன குருவாக மதிக்கப்படுகிறார்.

பிரம்மன் வேதத்தையே கையில் கொண்டிருந்தாலும் அவரை குருவாக- ஏன் ஒரு தெய்வமாகக்கூட  கோவில்களில் வணங்குவதில்லை. காரணம், அருணாசலத்தில் பொய் கூறினார். சதுர்வேத புருஷன் என்று மார்தட்டினாலும், "ஓம்' என்னும் பிரணவத்திற்குப் பொருள் சொல்ல முடியாமல் முருகனால் சிறையிலிடப்பட்டார். "நீ அறிவாயோ' என சிவன் கேட்க, "கேட்கும் முறையில் கேட்கத் தயாராயிருந்தால் சொல்வோம்' என்று, தந்தைக்கு உபதேசம் செய்த சுவாமிநாதன்- சிவகுருநாதன்- தகப்பன் சுவாமி எனப் பெயர் பெற்றவன் முருகன்! 

சிவன், பிரம்மன் மட்டுமல்ல; மாமன் விஷ்ணுவும் முருகனைப் பணிந்தவரே. விஷ்ணுவின் சக்கரம் திருத்தணிகை முருகன் மார்பில் பதிந்து விட்டபோது, அதை பெருமாள் பணிந்து கேட்க, முருகன் எடுத்து அளித்தானாம். இன்றும் தணிகேசனின் மார்பில் சக்கரம் பதிந்த அடையாளம் இருக்கி றது. அதை சந்தனத்தால் மூடுகிறார்கள். 

எனவே, ஸ்கந்தன் (ஒன்றியவன், சேர்ந்தவன்) ஞானஸ்கந்தன்- ஞானபண்டிதன்- ஞானகுருநாதனாக வணங்கப்படுகிறான். 

குகன் என்ற பெயர், பக்தர்களின் இதயக் குகையில் இருக்கும் எந்தக் கடவுள்களுக்கும் ஒப்பும் என்றாலும், முருகனுக்கே அது உரியதாக உள்ளது. காசியிலிருந்து திரும்பிய முத்துசுவாமி தீட்சிதர் திருத்தணிகை வந்து, முதன்முதலாக "ஸ்ரீநாதாதி குருகுஹோ ஜயதி' என்று பாடினார். 

ஸ்ரீவைகுண்டம் வாழ் குமரகுருபரன் ஊமை யாக இருக்க, திருச்செந்தூரில் 42 நாட்கள் விரதமிருந்து பயன் கிட்டாததால் கடலில் விழ யத்தனித்தபோது, அர்ச்சகர் வடிவில் வந்த முருகன் பூவைக் காட்ட, ஊமையாக இருந்த குமரகுருபரன் "பூமருவும்' என்று தொடங்கி கந்தர் கலிவெண்பா பாடினான் என்றால், முருகனின் அருளை என்ன சொல்வது!

காஞ்சி குமரக்கோட்டத்திலும் கச்சியப்ப சிவாச்சாரியருக்கு "திகடச்சக்கர' என ஆனைமுகன் பாடலை அடி எடுத்துக் கொடுத்து தமிழில் கந்தபுராணம் பாட வைத்தார்.
அக்கோவிலிலேயே அரங்கேற்றம் செய்தபோது- அந்த ஆரம்ப அடியே இலக்கணக் குற்றம் என ஒரு புலவர் சொல்ல, முருகனே முதிர்ந்த புலவனாக வந்து தெளிவு ஈந்து முருக தரிசனமும் தந்தாரென்றால் கந்தன் கருணையை என்ன சொல்வது!

முற்காலத்தில் பஞ்சாயதன பூஜை என்ற வழக்கமிருந்தது. சிவன், அம்பிகை, கணபதி, விஷ்ணு, சூரியன் ஆகியோரே அதற்குரிய தெய்வங்கள். சிவ பஞ்சாய தனம்  என்றால், சிவன் நடுவே இருப்பார். மற்ற நான்கு தெய்வ வடிவங்கள் நான்கு புறமும் இருக்கும். இதனில் முருகன் இல்லை.
திருச்செந்தூர் முருகன் ஆதிசங்கரரிடம் சிறிது விளையாடினான். சங்கரருக்கு நோய் ஏற்பட்டது. செந்தூர் முருகன்மீது அவர் புஜங்கம் பாட, நோய் தீர்ந்தது. அதன்பின் முருகனை பஞ்சாயதன தெய்வ ரூபங்களுடன் சேர்த்து "ஷண்மதம்' என போற்றி வழிபட வகுத்தார். என்னே முருகன் பெருமை! ஷண்முகனே ஷண்மதம் என போற்றும் அளவுக்கு பக்தர்கள் வழிபடு கிறார்கள்.

எனவே முருகனை நாம் நம்பிக்கையுடன் வணங்கிட, புனித கங்கை போன்று ஆறாக அருள் மழை பெய்து, அவகுணங்களை அடியோடு அழித்து, ஞானானந்த பிரகாசத் தில் நம்மை ஆழ்த்தி முக்திக்கு எய்துவிடுவான் என்பதை உணர்வோம்; குகமயமாக ஆவோம்.


ஸர்வம் குஹ மயம் ஜகத்.

வேலுண்டு வினையில்ல; மயிலுண்டு பயமில்லை; சேவலுண்டு ஏவலில்லை; குகனுண்டு குறைவேயில்லை!


 சஷ்டிக்கு இன்னொரு காரணம்!


தமிழகத்தில் ஐப்பசி அமாவாசைக்குப் பின் (தீபாவளி) வரும் சஷ்டி திதி அன்று முருகப் பெருமானைப் போற்றி விரதம் கடைப்பிடித்து சஷ்டி விழா கொண்டாடுவதுபோல், வடநாட்டில் சில இடங்களில் ஐப்பசி சஷ்டியன்று சட் பூஜை எனப்படும் சூரிய வழிபாடு நடைபெறுகிறது. இந்த விழா நீர் நிலைகளில் நடைபெறும் விழாவாகும். 

சுமங்கலிப் பெண்கள் தங்கள் குடும்பத்தினரும் உறவினர்களும் நலமுடன் இருக்க மூன்று நாட்கள் விரதம் கடைப்பிடித்து இவ்வழிபாட்டினைச் செய்கிறார்கள்.



கங்கை நதி ஓரங்களிலும்; பீகார் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் வசிப்பவர்கள் ஆறு, ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளிலும் சூரிய பூஜையை நடத்துவது வழக்கம்.

பூஜைப் பொருட்களான வெற்றிலைப் பாக்கு, பூ, பழங்கள், தேங்காய், சந்தனம், கரும்பு, இனிப்புகள், பலகாரங்களை பெரிய கூடையில் வைத்து ஆண்கள் நீர் நிலைக்கு எடுத்து வருவார்கள். நதிக்கரையோரத்தில் ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து, சுத்தம் செய்து, கரும்புகளால் கூடாரம்போல் அமைத்து, அதில் பூஜைக்குரிய பொருட்களை வைப்பார்கள்.


சுமங்கலிகள் சஷ்டி அன்று மாலை சூரியன் அஸ்தமனமாகும் வேளையிலும், மறுநாள் விடியற்காலையிலும் நீராடி, சூரியன் உதயமானதும் நீர் நிலைக்குள் நின்று சூரியனுக்கு அர்க்கியம் விட்டு, மந்திரம் சொல்லி பூஜை செய்வார்கள்.


மாலையிலும் காலையிலும் சூரியனை வழிபடுவதன் நோக்கம்- இரவும் பகலும் எப்படி சமமாக உள்ளதோ (ஐப்பசியில் இரவும் பகலும் சமமாக இருக்கும்) அதுபோல இன்பமும் துன்பமும் வாழ்வில் சமமாக இருப்பதாகச் சொன்னாலும், தாங்களும், தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களும், உறவினர்களும் நலமுடனும் சுகமுடனும் வாழவேண்டும் என்று சூரியனைப் பிரார்த்திப்பதே சூரிய சஷ்டி வழிபாட்டின் குறிக்கோளாகும்.



இந்தப் பூஜையை சட் பூஜை, ரவிசஷ்டி என்று வடமாநிலத்தவர்கள் போற்றுகிறார்கள்.

Friday 5 August 2011

வேலவனின் வேறு பெயர்களும் அதன் விளக்கமும்!





1. ஆறுமுகம்: ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம் என்ற ஐந்துடன் அதோமுகமும் சேர்ந்து ஆறுமுகமானது.
2. குகன்: குறிஞ்சி நிலத் தெய்வம், மலைக் குகைகளில் கோயில் கொண்டதால் குகன்.
3. குமரன்: மிக உயர்ந்தவன், இளமையை எப்போதும் உடைவன், பிரம்மச்சாரி ஆனவன்.
4. முருகன்: முருகு  அழகு என்று பொருள், எனவே முருகன் ஒப்புமையற்ற பேரழகன்.
5. குருபரன் : கு - அஞ்ஞான இருள், ரு - நீக்குபவர், ஆன்மாக்களின் அறியாமை இருளை அகற்றுபவன் குரு சிவனுக்கும், அகத்தியருக்கும், அருணகிரிக்கும் குருவாய் நின்று பிரணவத்தை உபதேசிப்பவன் குருநாதன்.
6. காங்கேயன்: கங்கையின் மைந்தன்.
7. கார்த்திகேயன்: கார்த்திகைப் பெண்களால் வளர்ந்தவன்.
8. கந்தன் : கந்து - யானை கட்டும் தறி. கந்தன் ஆன்மாக்களுக்குப் பற்றுக் கோடாய் இருப்பவன். பகைவர் வலிமையை அழிப்பவன் ஸ்கந்தன். தோள் வலிமை மிக்கவன். ஆறு திருமேனியும் ஒன்றானவன்.
9. கடம்பன் : கடம்ப மலர் மாலை அணிந்தவன்.
10. சரவணபவன் : சரம் - நாணல், வனம் - காடு, பவன் - தோன்றியவன், நாணல் மிக்க தண்ணீர் உடைய காட்டில் தோன்றியவன்.
11. ஸ்வாமி: ஸ்வம் - சொத்து, எல்லா உலகங்களையும், எல்லா உயிர்களையும் சொத்தாக உடையவன். சுவாமி என்ற பெயர் முருகனுக்கு மட்டுமே உரியது. சுவாமி உள்ள மலை சுவாமி மலை.
12. சுரேஷன் : தேவர் தலைவன் சுரேசன்.
13. செவ்வேள் : செந்நிறமுடையவன், ஞானச் செம்மை உடையவன்.
14. சேந்தன் : செந்தழல் பிழம்பாய் இருப்பவன்.
15. சேயோன் : சேய் - குழந்தை, குழந்தை வடிவானவன்.
16. விசாகன் : விசாக நட்சத்திரத்தில் ஒளியாய் உதித்தவன்.
17. வேலவன், வேலன் : வெல்லும் வேல் உடையவன். அறிவாக, ஞான வடிவாக விளங்கும் வேல், கூர்மை, அகலம், ஆழம் என்னும் மூன்றும் உடையது.
18. முத்தையன்: பிறப்பிலேயே முத்து ஒளியுடையது. மற்ற மணிகள் பட்டை தீட்டினால் தான் ஒளிரும். எனவே இயல்பாகவே ஒளிர்பவன் முத்தையன்.
19. சோமாஸ்கந்தன் : ச - உமா - ஸ்கந்தன்: சிவன் உமை முருகன்; சத்து - சிவம், சித்து - உமை, ஆனந்தம் - கந்தன், முருகன் ஆனந்த வடிவானவன்.
20. சுப்ரமணியன் : சு - மேலான, பிரம்மம் -பெரிய பொருளிலிருந்து, நியம் தோன்றி ஒளிர்வது. மேலான பெரிய பிரம்மத்தில் இருந்து தோன்றி ஒளிர்பவன்.
21. வள்ளற்பெருமான் : முருகன், மண்ணுலகில் அவதரித்த வள்ளி இச்சா சக்தி மூலம் இக நலன்களையும், விண்ணுலக மங்கை தெய்வானை கிரியா சக்தி மூலம் பரலோக நலன்களையும், வேலின் மூலம் ஞானசக்தியையும் ஆகிய மும்மை நலன்களையும், முக்தி நலன்களையும் வழங்குகிறார்கள்.
22. ஆறுபடை வீடுடையோன்: மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆறாதாரங்களை ஆறுபடை வீடுகளாய் உடையவன்.
23. மயில்வாகனன் : மயில் - ஆணவம், யானை -கன்மம், ஆடு - மாயை இந்த மூன்றையும் அடக்கி வாகனமாய் கொண்டவன்.
24. தமிழ் என்றால் முருகன். முருகன் என்றால் தமிழ். இரண்டையும் பிரிக்க முடியாத அளவிற்கு இணைந்தே இருக்கும். உதாரணமாக 12 உயிரெழுத்து என்பது முருகனின்  12 தோள்களை குறிக்கும்.  18 மெய்யெழுத்து என்பது முருகனின் 18 கண்கள் (முருகன் சிவனது நெற்றிப் பொறியிலிருந்து தோன்றியவர் என்பதால், இவரது ஒவ்வொரு முகத்திலும் இவருக்கும் நெற்றிக்கண் உண்டு) 6 இன எழுத்து என்பது 6 முகங்களை குறிக்கும்.  ஃ என்ற ஆயுத எழுத்து வேலை குறிக்கும்.இந்த வேலை வணங்குவதையே வேலையாக கொண்டால் வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்.
பாம்பன் சுவாமிகள் விளக்கம்
ஓம் சரவண பவ - பரமாத்ம வடிவம் சித்திக்கும்.
ஐம் சரவணபவ - வாக்கு வன்மை சித்திக்கும்.
சௌசரவணபவ - உடல் வன்மை சிறக்கும்.
க்லீம் சரவணபவ - உலகம் தன் வயமாகும்.
ஸ்ரீம் சரவணபவ - செல்வம் சிறக்கும்.